பஞ்சாங்கம் என்ற சொல் அனைவரும் நன்கு அறிந்ததே. பஞ்சாங்கம் என்ற சொல் இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம். பஞ்ச என்றால் ஐந்து. அங்கம் என்றால் உறுப்பு என்று பொருள்படும்.
தமிழ் பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள் கொண்டது என்று பொருளாகும்.

பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் முறையே : வாரம், திதி. நட்சத்திரம், யோகம், கரணம் ஆகும்.
எனவே பஞ்சாங்கம் என்பது இந்து கால கணிப்பு முறைப்படி கணிக்கப்படும் கால அட்டவணை ஆகும். பஞ்சாங்கத்தின் மூலம் நீங்கள் அன்றன்றைய வாரம், திதி, நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் போன்றவற்றை அறியலாம்.

பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் பற்றி சிறு குறிப்பு:

வாரம் :

வாரம் என்பது கிழமை எனப்படும். கிழமைகள் ஏழு என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று ஆகும். முக்கியமான கிரகங்கள் ஒன்பது அவற்றுள் ராகு, கேது என்ற இரண்டும் நிழல் கிரகங்கள் ஆகும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்ற ஏழு கோள்களும் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
வாரங்களில் திங்கள்,புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நான்கு கிழமைகளும் சுப வாரங்களாகவும், இரு கண்களை உடைய நாட்களாகவும், ஞாயிறு மத்திமமான சுப நாளாகவும், ஓரு கண்ணுடைய நாளாகவும், செவ்வாய் மற்றும் சனி ஆகியவை அசுப நாட்களாகவும் கண்களற்ற அல்லது குருட்டு நாட்களாகவும் கருதப்படுகின்றன.

திதி

திதிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
அவை 1.சுக்ல பட்சம், 2. கிருஷ்ண பட்சம்.
சுக்ல பட்சம்- வளர்பிறை, பூர்வ பட்சம் – இந்த மூன்றும் ஒரே பொருளைக் குறிக்கும்.

கிருஷ்ண பட்சம் – தேய்பிறை – அமர பட்சம் – இந்த மூன்றும் ஒரே பொருளைக் குறிக்கும்.
“சுக்ல” என்னும் சம்ஸ்கிருத சொல்லுக்கு வெண்மை என்று பொருளாகும். அமாவாசைக்குப் பிறகு சூரியனிடமிருந்து சந்திரன் விலகிச்செல்லச் செல்ல சந்திரன் பிறை நாளுக்கு நாள் வளர்ந்து வரும். வெண்மையாகத் தெரியும் சந்திரன் வளர்ந்து கொண்டே வருவதால் வளர்பிறை என்று கூறப்படுகிறது.

“கிருஷ்ண” என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு கருமை என்று பொருள் பௌர்ணமிக்குப் பிறகு சூரியனை நோக்கி சந்திரன் வர வர சந்திரனின் ஒளி குறைந்து கொண்டு வரும். சந்திரன் தேய்ந்து கொண்டே வருவதால் தேய்பிறை என்று கூறப்படுகிறது.

சூரியன்- சந்திரன் ஒரே பாகையில் இருக்கும் நாள் அமாவாசை என்றும் சூரியனுக்கு நேரெதிரில் சந்திரன் இருக்கும் நாள் பௌர்ணமி என்றும் கூறப்படுகின்றது.
வளர்பிறை திதி 14 தேய்பிறை திதி 14 அமாவாசை மற்றும் பௌர்ணமி என திதிகள் மொத்தம் 30 ஆகும்.

நட்சத்திரம்

இது பஞ்சாங்கத்தின் மூன்றாவது அங்கம் ஆகும். 360 பாகை கொண்ட ராசி மண்டலத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகை 20 கலை கொண்டது ஆகும். நட்சத்திரங்கள் மொத்தம் 27 ஆகும். 27 நட்சத்திரங்களுக்கும் ஒன்பது கோள்கள் அதிபதிகளாக இருக்கிறார்கள். ஒரு குழந்தை பிறக்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ அதுவே அந்தக் குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

ஒரு மனிதரின் வாழ்வில் பலன்களை தீர்மானிப்பதில் நட்சத்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு மனிதன் எப்படி தனது இருப்பிடத்திற்கேற்ப தகுதிகளைப் பெறுகிறானோ அது போல நட்சத்திரம் என்ற இடத்தில் சஞ்சரிக்கும் கிரகங்கள் வெவ்வேறு பலன்களைத் தருகின்றன.

யோகம்:

பஞ்சாங்கத்தின் நான்காம் அங்கம் யோகம் ஆகும். யோகம் என்பது சேர்க்கை என்று பொருள் ஆகும். வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள மொத்த தூரமே யோகம் எனப்படும். இந்த யோகங்கள் 27 ஆகும். இவற்றை நாம யோகங்கள் என்று கூறுவார்கள்.

சுப நாம யோகங்கள் :

ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம். சுகர்மம், விருத்தி, ஹர்ஷனம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரமம், பிராம்ஹம், ஐந்திரம், ஆகியவை சுப நாம யோகங்கள் ஆகும்.
அசுப நாம யோகங்கள்:

விஷ்கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், துருவம், வ்யாகாதம், வ்யதீபாதம், பரீகம், மற்றும் வைதிருதி ஆகியவை அசுப நாம யோகங்கள் ஆகும்.

கரணம்:

பஞ்சாங்கத்தில் ஐந்தாவது அங்கம் கரணம் ஆகும். திதியில் பாதி கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் பதினொன்று. அவை சர கரணங்கள். ஸ்திர கரணங்கள் என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கரணத்திற்கும் வெவ்வேறு அதிபதி இருக்கிறார்கள். இவரை கரண நாதர் என்று கூறுகிறோம்.

இவற்றின் அடிப்படையில் பஞ்சாங்கத்தின் பலன் :
பஞ்சாங்கத்தின் மூலம் நீங்கள் உங்கள் தினசரி வாழ்வின் முக்கியமான காரியங்களை செய்வதற்கு உகந்த கால நேரத்தையும், வாழ்வில் மகிழ்ச்சி அளிக்கும் சுப காரியங்களை செய்வதற்கான முகூர்த்தம் எனப்படும் நல்ல நேரம் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

தினசரி வாழ்வில் நல்ல நேரம் பற்றி அறியவும், மேலும் தவிர்க்க வேண்டிய காலங்களான ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களை பற்றி அறியவும் இந்தப் பகுதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும் சந்திராஷ்டம நாட்களை அறிந்து நீங்கள் எச்சரிக்கையாக செயல்பட உங்களுக்கு உதவும்.

முகூர்த்த நாட்களைப் பற்றியும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் விழா நாட்கள் பற்றியும், விரதம் மற்றும் உபவாசம் இருக்கும் நாட்கள் பற்றியும் அறியலாம்.

பௌர்ணமி, அமாவாசை, கார்த்திகை விரதம், சங்கடஹர சதுர்த்தி, கிரிவல நாட்கள், சிவராத்திரி போன்ற சிறப்பு நாட்களை நீங்கள் முன் கூட்டியே அறிந்து உங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் இயற்கை வானியல் நிகழ்வுகளான கிரகணம் போன்ற சிறப்பு நாட்களைப் பற்றியும் அறியலாம்.

Author's Bio: 

https://www.astroved.com/tamil/today-panchangam-tamil - தமிழ் பஞ்சாங்கம் மூலம் நீங்கள் அன்றன்றைய வாரம், திதி, நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் போன்றவற்றை அறியலாம்.