பஞ்சாங்கம்

புது வருடப் பிறப்பு என்றாலே, உடனே நினைவுக்கு வருவது பஞ்சாங்கம் தான். விதை விதைப்பது, அறுவடை செய்வது போன்ற விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளிலிருந்து, வேலையில் சேருவது, தொழில் தொடங்குவது, வெளியூர்ப் பயணம் மேற்கொள்வது, திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற முக்கிய, மங்கள நிகழ்ச்சிகளை நடத்துவது வரை, எந்த முக்கியச் செயலைச் செய்வதாக இருந்தாலும், பஞ்சாங்கம் பார்த்து, நல்ல நாள், நட்சத்திரம் போன்றவற்றை அறிந்து கொண்டு, அதற்குத் தகுந்தவாறு அந்தக் காரியத்தில் இறங்குவது என்பது, நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்வாறு, பஞ்சாங்கம் என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே விளங்கி வருகிறது.

பஞ்சாங்கம் என்ற வார்த்தை, ‘பஞ்ச’ மற்றும் ‘அங்கம்’ என்ற இரு வடமொழிச் சொற்கள் இணைந்து உருவானது ஆகும். இதன் பொருள் ‘ஐந்து அம்சங்கள்’ ஆகும். ஒரு நாட்பொழுது என்பது, திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் என்ற ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ஒரு நாட்பொழுதின் இந்த ஐந்து அம்சங்களையும் கணக்கிட்டு, நமக்கு அளிப்பது பஞ்சாங்கம் ஆகும். இந்த ஐந்து அம்சங்களை ஒரு வருடத்தின் அனைத்து நாட்களுக்கும் கணித்து வெளியிடும் இந்தக் கால அட்டவணை, ஜோதிட சாஸ்திரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. வான சாஸ்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, கணிக்கப்படும் இந்த பஞ்சாங்கத்தைக் கொண்டே, ஜோதிட சாஸ்திரத்தில் பலன் உரைக்கப்படுகிறது.

கால அட்டவணை

பஞ்சாங்கம் என்பது, வெறும் கூட்டிக் கழித்து, கணக்குப் போட்டு, சொல்லப்படும் விடை அல்ல. நம் ரிஷிகள், முன்னோர்கள் ஆகியோர், வான்வெளியில் சுழலும் கிரகங்களின் இயக்கத்தையும், சுற்றுப் பாதையில் அவை மேற்கொள்ளும் இடைவிடாத பயணத்தையும் பல்லாண்டுகள் கூர்ந்து கவனித்து உணர்ந்து, அதன் அடிப்படையில் உருவாக்கிய கால அட்டவணை ஆகும்.
ஆனால், நமது இளைஞர்களைப் பொறுத்தவரை, கால அட்டவணை என்பது, நாள்காட்டி எனப்படும் காலண்டரைத் தான் குறிக்கும். ஆனால் இது, ஆங்கிலேயர்கள் நம் மண்ணிற்குள் அடியெடுத்து வைத்த பின், நம்மிடையே பிரபலமான ஒன்று. இதற்கு முன், நம் இல்லங்களில் தவறாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது, பஞ்சாங்கம் தான். முன்பு ஓலைச் சுவடிகளில் கணிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த பஞ்சாங்கம், அச்சு இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு, ஒரு புத்தக வடிவில் வரத் தொடங்கியது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து, எல்லாத் துறைகளும் கணினிமயம் ஆனதற்குப் பின்னர், புராதனமான நமது பஞ்சாங்கமும் கணினி அதாவது கம்ப்யூட்டர் மயமானது. இன்று, இந்தக் கணினியின் ஒரு பொத்தானை அழுத்துவதன் வழியாக, பஞ்சாங்கத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளும், எந்த ஒரு நாள் குறித்த அனைத்து செய்திகளையும் நம்மால் அறிந்து கொள்ள இயலுகிறது.
வாக்கியப் மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கம்
வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம் என, பஞ்சாங்கத்தில் இரண்டு வகை உள்ளன. வாக்கியப் பஞ்சாங்கம், பண்டைய காலத்திலிருந்து, நம் ரிஷி, முனிகள் அனுசரித்து வந்த முறைப்படி அமைந்த ஒன்றாகும். காலப் பொழுதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், இதனால் விளைந்த மாற்றங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, பழைய முறையில் உள்ள குறைகளைக் களைந்து, உரிய மாறுதல்களுடன் பின்னர் உருவானது, திருக்கணிதப் பஞ்சாங்கம் ஆகும்.

தமிழ் பஞ்சாங்கம்

பஞ்சாங்கத்தைப் பற்றி பொதுவாகத் தெரிந்து கொண்ட நாம், இப்பொழுது தமிழ் பஞ்சாங்கத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். ஒரு ஏப்ரல் மத்தியிலிருந்து, அடுத்த ஏப்ரல் மத்திய காலம் வரை உள்ள தமிழ் வருடம் குறித்த, தினசரிச் தகவல்களைத் தருவது தமிழ் பஞ்சாங்கம் ஆகும்.

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. இவை அதே வரிசையில், சுழற்சி முறையில், மீண்டும், மீண்டும் வந்து கொண்டே இருக்கும். ஆங்கில வருடங்கள் போல் இல்லாமல், தமிழ் வருடங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. உதாரணமாக, தற்பொழுது நடைபெறும் தமிழ் வருடம் (2021-22) பிலவ வருடம் எனப்படுகிறது. இந்தத் தமிழ் வருடத்தின் ஒவ்வொரு நாளையும் குறித்த பஞ்சாங்கச் தகவல்களை, இந்த வருட பஞ்சாங்கம் கணித்துத் தருகிறது. உதாரணமாக, இந்த ஆண்டின் ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அது எந்தக் கிழமை, எந்தத் திதி, எந்த நட்சத்திரம், என்ன நாழிகை, என்ன யோகத்தில் பிறந்திருக்கிறது என்பதை, பஞ்சாங்கத்தைப் பார்த்தும், கணக்கிட்டும் அறிய முடியும். ஒருவரது ஜனனம் குறித்த, மகத்துவம் வாய்ந்த இது போன்ற தகவல்களின் அடிப்படையில் தான் அவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது. இந்த ஜாதகத்தை அலசி ஆராய்ந்து தான், அவரது வாழ்க்கை, எதிர்காலம், பாக்கியம் போன்றவை குறித்த ஜோதிடப் பலன்களும் கணிக்கப்படுகின்றன.

வருஷாதி நூல்

வான்வெளியில் திகழும் நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றை விவரிக்கும் வானவியல் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட, பல ஸ்லோகங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது, ‘வருஷாதி நூல்’ எனப்படும் புத்தகம் ஆகும். இந்த நூலில் உள்ள செய்திகளைக் கொண்டு தான், ஒவ்வொரு நாளையும் குறித்த பல தகவல்களைக் கொண்ட பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. எந்த ஒரு நாளிலும், ‘சூரியன் எப்பொழுது உதிக்கும்?’ ‘மழை வருமா? அவ்வாறு வரும் என்றால் எந்த நேரத்தில் வரும்?’ போன்ற தகவல்களிலிருந்து, விதை விதைப்பது, பயணம் போவது போன்றவற்றிற்கான உரிய கால நேரம் போன்றவை வரை, இந்த பஞ்சாங்கங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

தொலைநோக்கி போன்ற கருவிகள் இல்லாத காலத்தில், வெறும் கண்களால் பார்த்தே, கிரகங்கள், அவற்றிற்கு இடையே உள்ள தூரங்கள், அவற்றின் ஈர்ப்பு சக்திகள் போன்றவற்றை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள், இது போன்ற பஞ்சாங்கத்தையும் உருவாக்கி, நம் வாழ்க்கைப் பாதை, எதிர்காலம், நாம் அனுபவிக்கப் போகும் பலன்கள் ஆகியவற்றையும் கணித்து நமக்கு அளித்துள்ளனர்.

Author's Bio: 

உங்கள் பிரச்சினைகளுக்கு ஜோதிட தீர்வுகளைத் தேடுகிறீர்களா? கைதேர்ந்த ஜோதிட நிபுணர்களுடன் உடனடியாக தொலைபேசியில் பேசுங்கள் - https://www.astroved.com/astrospeaks/