மகா சிவராத்திரி

சிவபெருமானுக்காகவே அர்ப்பணிக்கப் பட்டுள்ள புண்ணிய தினம், மகா சிவராத்திரி ஆகும். சிவ பூஜை செய்வதற்கும், அவரை வணங்கி, மகிழ்வித்து, அவரிடமிருந்து வரங்கள் பல பெறுவதற்கும் மிகவும் ஏற்ற நாளாக இது விளங்குகிறது.

சிவனுக்குரிய இரவுப் பொழுதாகிய மகா சிவராத்திரி என்பது, பல நன்மைகளை நமக்கு அளிக்க வல்லது. மிகப் புனிதமான அன்றைய இரவுப் பொழுதில் சிவ வழிபாடு செய்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். காலப்போக்கில், அவர்களுக்கு மோசமும் கிடைக்கும் என புனித நூல்கள் கூறுகின்றன.

சிவராத்திரி என்பது, மாதாந்திர நிகழ்வாகும். இது, ஒவ்வொரு தேய்பிறை ததுர்தசி நாளிலும் அனுசரிக்கப்படுகிறது. தமிழ் மாதமாகிய மாசியில் வரும் இது போன்ற சிவராத்திரி நாள், மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. இது பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நிகழ்கிறது. அன்று நாடெங்கும் ஏராளமான மக்கள், சிவ ஆலயங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து, சிவபெருமானை வழிபடுகிறார்கள்.

மகா சிவராத்திரி மகிமை

சிவபெருமான் நிகழ்த்திய அற்புதச் செயல்கள், திருவிளையாடல்கள் பலவும் சிவராத்திரி காலத்தில் தான் நிகழ்ந்தன என்கின்றன புனித நூல்கள். இவை குறித்த பல புராணக் கதைகளும் நிலவுகின்றன. சிவராத்திரி மகிமையை விளக்கும் இந்தப் புராணக் கதைகள் சிலவற்றை நாம் இங்கு அறிந்து கொள்வோம், வாருங்கள்.

ஆலகால விஷத்தை உண்டு, சிவபெருமான், நீலகண்டன் எனப் பெயர் பெற்றது, இந்த சிவராத்திரி நாளில் தான். சாகாவரம் அருளும் அமிர்தத்தை வேண்டி, ஒருமுறை, தேவர்களும், அசுரர்களும் பாற்க்கடலைக் கடைந்தார்கள். இதன் காரணமாக அக் கடலிலிருந்து வெளிவந்தது, மிகக் கொடூரமான ஆலகால விஷம். இதன் தாக்கத்தால் உலகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தேவர்களூம், அசுரர்களும் செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது, இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பாற்றவும், மக்களையும், இதர ஜீவராசிகளையும் அழிவிலிருந்து பாதுகாக்கவும், சிவபெருமான் இந்தக் கடுமையான நஞ்ஜை எடுத்து, தான் வாயில் இட்டு விழுங்கினார். இதனால் உலகங்கள் காப்பாற்றப்பட்டன. உயிரினங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

ஆனால், இந்த விஷத்தால் சிவபெருமானுக்கு ஏதேனும் தீங்கு விளைந்து விடுமோ என்று அஞ்சிய பார்வதி தேவி, அவரது கழுத்துப் பகுதியிலே அதைத் தடுத்து நிறுத்தி விட்டார். சிவனது தொண்டையில் அந்த நஞ்சு தங்கியதால், அந்தப் பகுதி நீல நிறமாக மாறியது. அது முதல், நீல வண்ணத் கழுத்தைக் கொண்ட சிவபெருமான், நீலகண்டன் எனப் போற்றப் பெற்றார்.
இவ்வாறு சிவபெருமான் கொடிய நஞ்ஜை உண்டு உலகத்தைக் காத்த இரவு, சிவனுக்கு உரிய இரவாக, அதாவது சிவராத்திரியாக மக்களால் பக்தியுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சிவபக்தனான மார்க்கண்டேயனுக்கு விதிக்கப்பட்ட வயது 16 தான். அந்தக் காலம் முடிந்த பொழுது, அவன் உயிரைக் கவர, எமதர்மன் வந்து சேர்ந்தான். மரண தேவனிடமிருந்து தப்பிக்க சிவனைத் தஞ்சம் அடைந்த மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொண்டான். பாலகனின் உயிரைக் கவர எமன் பாசக் கயிற்றை வீச, லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட இறைவன் யமனைக் காலால் உதைத்து, பக்தனைக் காப்பாற்றினார். மார்க்கண்டேயனது பக்தியை மெச்சி அவனுக்கு, என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக வாழும் வரமும் அளித்தார். இறைவன் இந்தத் திருவிளையாடலை நிகழ்த்திய நாளும் சிவராத்திரி தான் என்கின்றன புராணங்கள்.

சிவராத்திரியில் நடந்த மற்றொரு நிகழ்வும் சுவையானது தான். ஒருமுறை அன்னை உமா தேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினார். இதனால் உலகம் ஒரு கணம் இருண்டு போனது. உயிரினங்கள் நிலைகுலைந்து போயின. தான் அறியாமல் செய்த தவறால் நடந்து போன விபரீதத்தை கண்டு வருந்திய அன்னை, சிவபெருமானைக் குறித்து விரதமிருந்து, கடும் தவம் இயற்றினார். இதனால் மகிழ்ந்து போன இறைவன், சிவராத்திரி தினத்தன்று, அன்னையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

மேலும், பார்வதி தேவிக்கு தனது உடலின் இடது பாகத்தை அளித்து, சிவபெருமான், உமையொரு பாகனாக அதாவது அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி அளித்ததும், சிவராத்திரியின் மகிமையை விளக்கும் மற்றொரு நிகழ்வாகும்.

ஒருமுறை, படைப்புக் கடவுளான பிரம்ம தேவருக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் இடையே, தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அவர்களது அறியாமையைச் சுட்டிக் காட்ட நினைத்த சிவபெருமான், இருவருக்கும் இடையே, ஒரு பிரம்மாண்டமான ஒளிப் பிழம்பாக நின்றார். அதன் அடியையோ முடியையோ காண முடியாத அவர்கள், சிவபெருமானே முழுமுதற் கடவுள் என உணர்ந்து, அவரை வணங்கினர். சிவராத்திரி அன்று தான், இறைவனின் இந்தத் திருவிளையாடலும் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இவை தவிர, அர்ஜுனன் கடும் தவமிருந்து சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரம் பெற்றதும், பக்தர் கண்ணப்ப நாயனார், தன் இரு கண்களையும் இறைவனுக்குக் கொடுத்து, அவர் அருள் பெற்று, வீடுபேறு அடைந்ததும், சிவராத்திரி தினங்களே ஆகும்.

சிவராத்திரி பூஜை

சிவராத்திரி இரவு முழுவதும் மக்கள் விழித்திருந்து, விரதங்கள் அனுசரிக்கிறார்கள். சிவ ஆலயங்களில், இரவு முழுவதும் நடைபெறும் 4 கால அபிஷேகங்கள், அர்ச்சனைகள், பூஜைகள் ஆகியவற்றிலும் அவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு, சிவபெருமானை வழிபடுகிறார்கள்.

இந்த ஓர் இரவில் செய்யப்படும் சிவ பூஜை, ஓர் ஆண்டு முழுவதும் செய்யும் சிவ வழிபாட்டுக்கு நிகரானது. இது பாவங்களைத் தொலைத்து, விருப்பங்களை நிறைவேற்றி, இறுதியில், கிடைப்பதற்கு அரிய மோட்ச சாம்ராஜ்ஜியத்தையும் அளிக்க வல்லது என்பது திடமான நம்பிக்கை.

Author's Bio: 

https://www.astroved.com/astropedia/en/festivals/maha-shivratri - சிவனின் இந்த அபார இரவில், ஞானம், வளம், அசாதாரணமான ஆசிகள், விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை அருளும் சிவபெருமானின் ஆசிகளை வேண்டிப் பெறுங்கள்.