நமது இந்து மத கலாசாரத்தில் ஆன்மீக ஈடுபாடும் அதன் மீதான மக்களின் நம்பிக்கையும் அசைக்க முடியாத ஒன்று ஆகும். இறைவழிபாடும், விசேஷமான தினங்களில் விரதம் கடைபிடிக்கும் முறையும் மக்களால் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு. அது போல ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு சிறப்பு உண்டு. கடவுளுக்கு மட்டுமன்றி நவகிரகங்களுக்கும் சிறப்பு உண்டு. அந்த வகையில் கார்த்திகை மாதம் நவகிரகங்களில் ஒன்றாகத் திகழும் சந்திரனுக்கும் உகந்த மாதமாக கருதப்படுகின்றது. சந்திரனுக்கு பெருமை சேர்த்த சிவபெருமானுக்கும் உகந்த மாதமாக போற்றப்படுகின்றது. மேலும் அந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான நாட்கள் ஆகும்.

கார்த்திகை சோமவார விரதம்

சோமவாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமையில் இந்த விரதம் வருவதால் இது கார்த்திகை சோமவாரம் என்று அழைக்கப் படுகின்றது. பொதுவாகவே திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகின்றது. அதற்குக் காரணம் சிவபெருமான், திங்கள் என்றும் அழைக்கப்படும் சந்திரனின் சாபத்தை குறைத்து, சந்திரனுக்கு பெருமை தரும் வகையில் பிறை சந்திரனாய் தனது சடாமுடியில் சூட்டிக் கொண்டார்.

எல்லா திங்கட்கிழமைகளிலும் விரதம் இருப்பது நல்லது என்ற போதிலும் கார்த்திகை மாதம் வரும் சோம வாரங்கள் விசேஷமாக கருதப்படுகின்றது. அது சிவபெருமானை குறித்த விசேஷமாக காணப்படுவதற்குக் காரணம் கார்த்திகை சோமவாரம் அன்று தான் சிவபெருமான் சந்திரனை தனது தலையில் சூடி சந்திர சேகர் என்று அழைக்கப்பட்டார். எனவே தான் கார்த்திகை சோம வார விரதம் சிவபெருமானைக் குறித்த விரதமாகக் காணப்படுகின்றது.

கார்த்திகை மாதம் ஆரம்பித்து வரும் முதல் திங்கட்கிழமையில் இருந்து அந்த மாதம் முடியும் வரை உள்ள திங்கட்கிழமை வரை இந்த விரதத்தினை கடைபிடிக்க வேண்டும். விரதம் என்பது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அவ்வாறு தூய்மையாக்கும் போது நம்முள்ளும் நம்மைச் சுற்றியும் ஒரு நேர்மறை ஆற்றல் பரவுகின்றது. தூய்மை உள்ள இடத்தில் இறைவன் வாசம் செய்கிறான். எனவே விரதம் மூலம் நாம் இறை ஆற்றலைப் பெற இயலும்.

கார்த்திகை சோமவார விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை சோமவாரம் அன்று காலையில் எழுந்து உடல், உள்ளம், இல்லம் என அனைத்தையும் தூய்மை செய்து கொள்ள வேண்டும். இல்லத்தில் விளக்கேற்றி பூஜைகள் செய்துவிட்டு ஆலயம் சென்று வர வேண்டும். காலை மாலை என இரண்டு வேளைகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும். வில்வ இலைகளைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை மற்றும் பூஜை வழிபாடுகள் செய்ய வேண்டும். ஒரு வேளை மட்டும் சாத்வீக உணவினை உண்ண வேண்டும். இறை நாமங்களை ஜெபிப்பதும் கேட்பதும் நன்று. சிவ பஞ்சாட்சரம், சிவாஷ்டகம், சிவ ஸ்தோத்திரம், சிவன் அஷ்டோத்திரம் போன்றவற்றை கேட்பதும் சொல்வதும் நன்மை அளிக்கும். இந்த விரதத்தை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை செய்வதற்கு நேர்ந்து கொண்டு அது வரை செய்யலாம். விருப்பம் இருந்தால் இதனை நாம் நமது வாழ்நாள் முழுவதும் கூட கடைபிடிக்கலாம்.

கார்த்திகை சோமவார விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை

சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சிவஸ்தலங்களை தரிசிப்பது நல்லது
சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வது நல்லது
சங்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது
சிவனுக்கு பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது
அன்னதானம் நிகழ்சிகளில் பங்கு கொள்வது நன்று
ஆலயத்தில் சங்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது.

கார்த்திகை சோம வார விரத பலன்கள் :
திருமணம் கை கூடும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும்
கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவில் நல்லிணக்கம் ஏற்படும்.
திருமண உறவில் இருந்துவரும் கசப்புகள் நீங்கும்.
பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.
மனதில் அமைதி குடிகொள்ளும்
குழந்தை பாக்கியம் கிட்டும். வம்சம் தழைக்கும்
பாவங்கள் யாவும் அகலும்
கல்வி மற்றும் செல்வ வளங்கள் கிட்டும்
நம்பிக்கை பிறக்கும். பயன்கள் அகலும்
ஆயுள் விருத்தி அடையும்

Author's Bio: 

திங்கட்கிழமைகள் எப்பொழுதும், சிவனுக்கு உகந்த, புனிதமான நாட்களாகவே திகழ்கின்றன. கார்த்திகை சோமவாரம் என்பது, கார்த்திகை மாதத்தில் வரும், வருடத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த நான்கு திங்கட்கிழமைகளைக் குறிக்கிறது. தமிழ் மாதமாகிய கார்த்திகையில் (நவம்பர் மத்திய காலம் முதல் டிசம்பர் மத்திய காலம் வரை) சிவபெருமானின் ஆற்றல், நமக்கு அபாரமாகக் கிடைக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தின் திங்கட்கிழமைகளில், எங்கள் விசேஷ வழிபாடுகளின் மூலம், சிவபெருமானின் அருளை வேண்டிப் பெற்று, உங்கள் கர்மாக்களைப் போக்கிக் கொள்ளுங்கள்; உங்கள் மனம், உடல், ஆன்மா ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்